ஸ்ரீரங்கம் கோயிலில் மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்வதில்லை.அதற்கு பதில் கோவில் பணியாளர்களை கொண்டு ஆண்டுக்கு இருமுறை கோவில் ஊழியர்களால் இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட தைலம்பூசப்பட்டு(தைலக்காப்பு) உலர்ந்தபின் நீக்கப்பட்டு மெருகு ஊட்டப்படுகிறது.
இத்தலத்தில் ஆண்டாள், திருப்பாணழ்வார், துலுக்கநாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்து உள்ளனர்.
மூலவர் பெரிய பெருமாள் ஏழு திருச்சுற்றுகளுக்குள் கருவறையில் தென்திசை நோக்கி பள்ளி கொண்டு உள்ளார். முதல் சுற்று திருவுண்ணாழி திருச்சுற்று, 2வது சுற்று ராஜமகேந்தின் சுற்று, 3வது சுற்று குலசேகரன் திருச்சுற்று, 4வது சுற்று ஆலிநாடான் திருச்சுற்று, 5வது சுற்று அகளங்கன் திருச்சுற்று, 6வது சுற்று திருவிக்ரமன் திருச்சுற்று(உத்திர வீதி), 7வது சுற்று கலியுகராமன் திருச்சுற்று(சித்திரை வீதிகளில் குடியிருப்புகளும், வணிக வளாகங்களும் கொண்ட பகுதிகளாக விளங்குகிறது). இந்த ஏழு திருச் சுற்றுக்களையும் உள்ளடக்கி 156 ஏக்கர் பரப்பளவில் அடையவளஞ்சான் திருச்சுற்று எனப்படும் 8வது சுற்று மதில்சுவர் அமைந்து உள்ளது.
நான்காவது திருச்சுற்றில் தன்வந்திரி சன்னதிக்கு வடபுர கோபுர வாசலின் பாறையில் 5 குழிகள் உண்டு. இவ் விடத்திற்கு மூன்று வாசல்கள் வழி வர முடியுமாதலால் இதற்கு ஐந்து குழி மூன்று வாசல் என்பது பெயர். இங்கு தாயார் அரங்கன் வருகிறாராவென்று இந்த ஐந்து குழிகளிலும் தன்கை விரல்களை வைத்து மூன்று வாசல்கள் வழியாகவும் பார்ப்பாராம்.
கோயிலின் கருவறையின் மேலே தங்கத்தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தில் மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன. விமானத்தின் அமைப்பு தாமரையின் இதழ்களில் இருந்து வெளிவரும் நிலையி லுள்ள நான்கு தங்கக்கலசங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விமானத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் மகரவடிவில் உள்ள பகுதியில் தெற்கில் பரவாசுதேவர், மேற்கில் அச்சுதர், வடக்கில் அனந்தர், கிழக்கில் வேணு கோபாலர் அல்லது கிருஷ்ணகோவிந்தர் ஆகிய திருமாலின் திருஉருவங்கள் அமைக்கப்பெற்றுள்ளன.
ஆண்டுதோறும் துலாமாதத்தில் (ஐப்பசி) பெருமாளுக்கு திருமஞ்சனம் மற்றும் பூஜைக்கு பயன்படுத்தும் பொருட்கள் தங்கத்தில் செய்யப்பட்ட பொருட்களையே பயன்படுத்த ப்படுகிறது.துலாமாதம் 30நாட்களும் மூலவருக்கும், உற்சவருக்கும் சாளக்கிராம மாலை அணிவிக்கப்படும்.
No comments:
Post a Comment